வழிபாடுகள் வன்முறைக்கு அல்ல (ஜும்ஆ உரை 26.08.2022)

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்
ஜும்
ஆ உரை 26.08.2022

வழிபாடுகள் வன்முறைக்கு அல்ல

வணக்க வழிபாடுகளின் முக்கியத்துவத்தையும்,ஒவ்வொரு சமூகத்திற்கும் வணக்க வழிபாடுகள் வேறுபடுகின்ற விஷயத்தையும்,வணக்க வழிபாடுகளை வைத்து சமகாலச் சூழலில் நடத்தப்படுகிற வன்முறைகள் குறித்தும் நாம் விழிப்புணர்வு பெறுவது மிக அவசியமானது என்கிற அடிப்படையில் ஒரு சில செய்திகளை இந்த ஜும்ஆ உரையில் நாம் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்

வணக்க வழிபாடுகளும், வெவ்வேறு சமூகங்களும்

இபாதத்” என்பதை வணக்கவழிபாடு என்று நாம் மொழி பெயர்ப்பதுண்டு.
உலகத்தில் தோன்றி மறைந்த அனைத்து சமூகங்களும் ஒவ்வொரு வகையான வழிபாடுகளை பின்பற்றி வந்ததை நாம் அறிகிறோம்;

திருமறை குர்ஆன் சொல்வதைப் போல..

لِّـكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوْهُ‌ فَلَا يُنَازِعُنَّكَ فِى الْاَمْرِ‌ وَادْعُ اِلٰى رَبِّكَ‌  اِنَّكَ لَعَلٰى هُدًى مُّسْتَقِيْمٍ‏

(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.
(அல்குர்ஆன் : 22:67)

அறியாமை காலத்து
வழிபாட்டு முறைகள்
வெவ்வேறாக இருந்தது;
அறியாமைக் காலச் சிந்தனைகளில் முதலிடம் வகிப்பது மத ரீதியான சிந்தனைகள்தான்;ஜாஹிலிய்யா காலத்து கொடுமைகளிலேயே மிக மோசமானதாக இது இருந்தது;

ஜாஹிலிய்யா கால வழிபாட்டாளர்களில் முஷ்ரிக்குகள் மிக முக்கியமானவர்கள்;இவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போராவர்;இவர்களே அரேபியாவில் பெரும்பான்மையாக வசித்தவர்கள்;குறைஷிகளுள் பெரும்பாலானோர் விக்கிரக வணங்கிகளாகவே இருந்தனர்.

நபியவர்கள் பிறப்பதற்கு சுமார் 300 வருடங்களுக்கு முன்பிருந்தே விக்ரஹ வணக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் அரேபியர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை (மில்லத்) ஏற்று நடப்போராகவே இருந்தனர்;பின்னர் “குஸா ஆ” கோத்திரத் தலைவனாக இருந்த அம்ர் இப்னு லுஹை என்பவன் ஸிரியாவுக்குச் சென்று,அங்கு பின்பற்றப்பட்டு வந்த விக்கிரக வணக்கத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் “ஹுபல்” எனப்பட்ட விக்கிரகத்தை எடுத்து வந்து விக்கிரக வழிபாட்டை ஆரம்பித்து வைத்தான்.

ஒரு நளைக்கு ஒரு கடவுள் என்ற வகையில் கஃபாவில் மாத்திரம் 360 சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன;இவை அனைத்தினதும் தலைமைச் சிலையாக ஹுபல் வைக்கப்பட்டிருந்தது;விலை உயர்ந்த செந்-நிறக் கல்லில் செதுக்கப்பட்டிருந்த இந்த ஹுபலின் இரு மருங்கிலும் பொன்னால் செதுக்கப்பட்ட இரு மான் குட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றைச் சூழவே இதர 360 சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன.

அரேபியரின் விக்கிரக வழிபாட்டு முறைகள் சில:

விக்கிரகங்களுக்கு முன்னால் தலையை நிலத்தில் வைத்து வணங்குதல்
அவற்றுக்கு அண்மையிலமர்ந்து அவற்றிடம் தஞ்சமடைதல்
அவற்றைச் சுற்றி வலம் வருதல்
அவற்றுக்குப் படையல்களைச் சமர்ப்பித்தல்
கால் நடை, விவசாய விளைச்சல் முதலானவற்றில் நேர்ச்சை  செய்தல்

அரேபியரின் பிரதான விக்கிரகங்கள் பற்றியும்,நபி நூஹ் (அலை) அவர்களது காலத்து விக்கிரகங்கள் பற்றியும் அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

நீங்கள் வணங்கி வழிபடும் தெய்வங்களான “லாத்”, “உஸ்ஸா” போன்றவற்றையும் மூன்றாவதான “மனாத்”தையும் பார்த்தீர்களா?(53: 19 – 20)
மேலும் அவர்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்; இன்னும் “வத்து” “ஸுவாஃ” “யகூஸ்” “யஊக்” “நஸ்ர்” முதலானவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள் எனவும் கூறுகின்றனர். (71: 22)

“அல்-ஜிப்த்”, “அத்-தாகூத்” எனும் பெயெரிலான இரு கடவுளர்களை குரைஷியர் வணங்கி வந்தனர்.

நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்து விக்கிரகங்கள் புதைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகழ்ந்தெடுத்து வழிபாட்டுக்காக நிறுத்தியவனும் அவனேயாவான்;

சிலை வணக்கத்தில் ஈடுபட்டாலும் ஹஜ் வணக்கமும் அரேபியரிடம் இருந்தது. ஹஜ், உம்றாச் செய்தல், கஃபாவைத் தவாப் செய்தல், அரஃபா, முஸ்தலிபாவில் தங்குதல், குர்பானி கொடுத்தல், கஃபாவை கண்ணியப்படுத்தல் போன்ற வழிபாடுகளும் அவர்களிடம் காணப்பட்டன.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களால் தவ்ஹீதின் நிலைக்களமாக அமைக்கப்பட்ட கஃபா,ஷிர்க்’கின் மையமாக விளங்கிற்று;அதனுள் சிலைகள் நிரம்பிக் காணப்பட்டன;அவை நாள்தோறும் பூஜிக்கப்பட்டன;மக்கள் நிர்வாணமாக அதைச் சுற்றி வளம் வந்தனர்;

அவ்வேளை கைகொட்டி, சீட்டியடித்து, கொம்பூதி ஆரவாரிக்கப்பட்டது;குர்பானியின் இரத்தம் கஃபாவில் தோய்க்கப்பட்டு அதன் மாமிசம் தரையில் பரப்பப்பட்டது. இபாதத் என்பது வழிபாட்டு சம்பிரதாயமாக அமைந்ததே தவிர அர்த்த புஷ்டியுள்ளதாகவும் உள்ளார்ந்ததாகவும் அமையப்பெறவில்லை.

இவ்வாறு இவர்கள் சிலை வணக்கத்தில் ஈடுபட்ட போதும் அல்லாஹ்வுடைய ருபூபிய்யத் தொடர்பான விஷயத்திலும் தெளிவான நம்பிக்கை இருந்தது.

இதனை அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது;

“வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று அவர்களிடம் கேட்டால், “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாகப் பதில் கூறுவார்கள்” (31: 25).

எனினும் அச்சிலைகள் தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யுமென அவர்கள் நம்பினர்.

இது பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

“அல்லாஹ் அல்லாத, தமக்கு எந்தவொரு நன்மையோ,தீமையோ செய்ய இயலாதவற்றை அவர்கள் வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள் இவை எங்களுக்காக அல்லஹ்விடம் மன்றாட்டம் செய்பவை என்றும் கூறுகின்றனர்.” (10: 18)

இவர்கள் போக நட்சத்திர வணங்கிகள், நெருப்பு வணங்கிகள்,யூதர்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறுபட்ட நம்பிக்கை கொண்ட மக்கள் அவரவர்களுக்கு உரிய வழிபாடுகளை பின்பற்றி வந்தனர்.

இப்படி ஒவ்வொரு தரப்பாருடைய வணக்க வழிபாடுகளும் வெவ்வேறு விதங்களில் அமைந்திருக்கும் ஒரு சூழலில் ஜாஹிலிய்யா காலத்து மக்களுக்கு மத்தியில் இஸ்லாம் தோன்றியது.

இஸ்லாம் வணக்க வழிபாடுகளை வலியுறுத்தியதுடன் அதன் நோக்கமும், முறைகளும் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்து இயம்பியது

இஸ்லாமும்,இபாதத் எனும் வணக்க வழிபாடுகளும்

இஸ்லாத்தைப் பொறுத்தளவில் வணக்க வழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன

மனித வர்க்கத்தையும்,ஜின் வர்க்கத்தையும் என்னை வணங்கி வழிபடுவதற்கும்,
தான் படைத்தேன் என்கிறான் வல்ல இறைவன்

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
(அல்குர்ஆன் : 51:56)

அல்லாஹ் விரும்பக்கூடிய அனைத்து செயல்பாடுகளும் இபாதத் எனப்படும் வழிபாடுகளில் சேர்ந்தவையாகும்;இறைவன் விரும்பக்கூடிய நற்குணங்களில் நிலைத்திருப்பதும்கூட இறை வணக்கத்தில் சேர்ந்தவை என்பது இஸ்லாத்தின் வழிகாட்டுதலாகும்

வணக்கம் என்பது அல்லாஹ் விரும்பக்கூடிய ஏற்றுக் கொள்ளகூடிய எண்ணங்கள்,செயல்கள் மற்றும் சொற்கள் அனைத்தும் இபாதத் ஆகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்;

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

தன் நாவாலும் கரத்தாலும் பிற முஃமினுக்கு துன்பம் தராதவனே உண்மையான முஸ்லிம்

இது போன்ற நபிமொழிகளின் அடிப்படையில் வழிபாடுகள் என்பது தொழுகை போன்ற வணக்கங்கள் என்பதையெல்லாம் கடந்து குணங்கள்கூட வணக்க வழிபாடுகளைச் சார்ந்தவை என்பது இஸ்லாமிய வழிகாட்டுதலாகும்.

மேற்கூறப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் வழிபாடுகள் ஒவ்வொரு சமூகத்திற்கும் வேறுபடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். வழிபாடுகளின் நோக்கங்கள் என்னவாக இருக்க வேண்டும்?

இஸ்லாத்தைப் பொறுத்தவரை வணக்க வழிபாடுகளுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருவதுடன் அவைகளுடைய நோக்கங்கள் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது

அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுதல் அவனது நெருக்கத்தை அடைதல் அவனது கடமைகளை நிறைவேற்றிய அடியார்களாக மாறுதல்
அவனுக்கு நன்றியுள்ள அடியார்கள் என்பதை வெளிப்படுத்துதல்

வணக்க வழிபாடுகள் விஷயத்தில் நம்முடைய நோக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவுபடுத்தியதுடன் பின்வரும் நோக்கங்களுடன் நம்முடைய வணக்கங்கள் அமையக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்தியது.

பெருமைக்காக இறை வணக்கம் கூடாது பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக செய்திடக் கூடாது
பிறருக்கு நோவினை தருவதற்காக வழிபாடுகள் கூடாது
வன்முறை வெறியாட்டங்களுக்காக வழிபாடுகளை நடத்தக் கூடாது
பிற கடவுள்களை ஏசி பேசுவதற்காக கூட கூடாது

பின்வரும் இறைவசனத்தை பாருங்கள்;

وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ‌ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் – பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:108)

வழிபாட்டின் பெயரால் வன்முறைகளும்,நமது கடமைகளும்

இந்தியாவைப் பொறுத்தவரை இந்துத்துவ மதவாத சக்திகள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் நீண்ட நெடுங்காலமாக கலவரத்தை, வன்முறைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழல்களை பரவலாக காணுகிறோம்

வன்முறைகளையும் கலவரங்களையும் செய்வதற்கென்று கொண்டு வரப்பட்ட வழிபாடாகாவே விநாயகர் சதுர்த்தி விழாக்களும் வட மாநிலங்களில ராம நவமி போன்ற ஊர்வலங்களும் நடைபெறுகிறது என்பதை ஒவ்வொரு வருட சதுர்த்தி நிகழ்வுகளும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன

இந்த ஊர்வலங்களின் போது முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டு ஸ்தலங்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்புவதும், முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் சப்தங்களை உயர்த்துவதும் வாடிக்கையாக நடந்து கொண்டு வருகிறது.

இதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் பதட்டமான சூழ்நிலையை சந்திக்கின்றன;அதில்  இஸ்லாமியர்கள் மிகப் பிரபலமாக நிறைந்த ஊர் தான் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பதட்டத்தை உருவாக்குகிறார்கள் என்பது ஒரு தொடர்கதை

இவ்வாறு அவர்கள் வழிபாட்டின் பெயரால் நடத்துகின்ற வன்முறை வெறியாட்டங்களை கண்டும் காணாமல் விடுவது ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு அழகல்ல;இது போன்ற சந்தர்ப்பங்களில் துணிவுடனும் தைரியத்துடனும் அவர்களது வெறியாட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்கும் உண்டு.

காரணம் அவர்களது இந்த செயல்கள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டியவையாகும்;பிறரது உணர்வுகளையும்,மத நம்பிக்கைகளையும் காயப்படுத்தக்கூடிய செயல்களை கண்டும் காணாமல் இருந்திட கூடாது.

நபி(ஸல்)கூறினார்கள்;

مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ».

உங்களில் ஒருவர் தவறை கண்டால் கரம் கொண்டு தடுக்கட்டும்.முடியாவிடில் நாவால் தடுக்கட்டும்;அதுவும் முடியாவிடில் மனதளவில் வெறுக்கட்டும்;இதுவே மிகக்குறைந்த ஈமானாகும்.

எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் கலவரக்காரர்களின் வெறியாட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது;

இறைவனுக்கு மாறு செய்தவர்கள் பற்றி பின்வரும் இறை வசனம் தெளிவுபடுத்துகிறது;

كَانُوْا لَا يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ‌ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ‏

இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.
(அல்குர்ஆன் : 5:79)

நபி (ஸல்)அவர்கள் ஒரு ஒரு அழகிய உவமை மூலம் பின்வரும் ஹதீஸை மொழிந்தார்கள்;

مَثَلُ القَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالوَاقِعِ فِيهَا، كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ، فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلاَهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا، فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِنَ المَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ، فَقَالُوا: لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا، فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا، وَنَجَوْا جَمِيعًا “

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்;

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும்.

அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்;(அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும், சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.
கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்;

நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள்.

(ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.

ஆக,இப்படிப்பட்ட வழிபாட்டு வன்முறைகளின் போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்;அத்துடன் இழப்புகள் ஏற்படாமல் எச்சரிக்கை உணர்வுடன் வன்முறை செய்பவர்களை தடுத்து நிறுத்திட வேண்டும்;

இறுதியாக..

மேலே குறிப்பிட்ட அடிப்படையில் வணக்க வழிபாடுகள் எல்லா சமூகங்களுக்கும் மிக முக்கியமானது என்ற போதிலும் வழிபாடுகளின் வழியே நல்ல நோக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.

வணக்க வழிபாடுகள் என்ற பெயரால் வன்முறைகளை செய்வதும் அடுத்தவர்களுடைய உள்ளங்களை காயப்படுத்துவதும் இனி ஒருபோதும் நிகழாமல் தடுத்திட வேண்டும்;அது காலத்தின் கட்டாயமாக அதில் நம்மில் ஒவ்வொருவரும் நிறைவான பங்களிப்பு செலுத்த வேண்டும்.